21 October 2010

27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில் - [ திருவோணம்- Sravana]


ஸ்தல வரலாறு : 

புண்டரீக மகரிஷி பெருமாள் கோயில்களுக்கு யாத்திரை சென்றார். நாராயண சதுர்வேதிமங்கலம் என்னும் தலத்தில் அவர் நுழைந்ததும், அங்கு சிவலிங்கம் இருப்பதைப் பார்த்தார். பெருமாள் கோயிலுக்கு பதிலாக சிவாலயத்துக்குள் வந்துவிட்டோமே என வெளியே வந்த போது, சிவன் ஒரு முதியவர் வேடத்தில் அங்கு வந்து, ரிஷியே! நீங்கள் உள்ளே சென்று வந்தது பெருமாள் சன்னதி தான், என்றார். ரிஷியோ மறுத்தார். முதியவர் மறுபடியும் ரிஷியை மூலஸ்தானத்திற்குள் அழைத்து சென்று, அங்கிருந்த ஆவுடையின் மேல் ஏறி நின்று பெருமாளாக பிரசன்னமாகி தரிசனம் தந்து, சிவன் வேறு , விஷ்ணு வேறு கிடையாது. இரண்டும் ஒன்று தான், என்றார். அத்துடன், அமர்ந்த கோலத்திலும் கிடந்த கோலத்திலும் தரிசனம் தந்து,ரிஷியே ! உங்களால் திருப்பாற்கடல் சென்று இந்த மூன்று கோலங்களிலும் தரிசிக்க இயலாது என்பதால் இங்கேயே அந்த தரிசனத்தை தருகிறேன். உங்களுக்கு இந்த மூன்று கோலங்களையும் இங்கு காண்பித்ததால், இத்தலமும் இன்று முதல் திருப்பாற்கடல் என அழைக்கப்படும், என்று அருளினார். புண்டரீக மகரிஷிக்காக பெருமாள் பிரசன்னமானதால் (தோன்றுதல்) இங்குள்ள பெருமாள் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் ஆனார். இவளுடன், அலர்மேலு மங்கை தாயார் அருள் செய்கிறாள்.

சிறப்பம்சம்: 

சந்திரபகவான் ஒரு சாபத்தினால், இருளடைந்து இருந்தான். இதனால், அவனது மனைவியரில் ஒருத்தியான, திருவோண நட்சத்திர தேவி மிகவும் வருத்தமடைந்தாள். அவள் இத்தலத்தின் பெருமை அறிந்து, இங்குள்ள பெருமாளை வேண்டி தவமிருந்தாள். இவளது தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள், ஒரு மூன்றாம் பிறை நாளில் சந்திரனுக்கு காட்சி தந்து அவனது தோஷத்தை போக்கினார். அன்றிலிருந்து இத்தலம் திருவோண நட்சத்திர தலமானது. திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ, மூன்றாம் பிறையன்றோ இத்தல பெருமாளுக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டால் நினைத்தது நடக்கும். மாணவர்களுக்கு கல்வி அறிவு வளரும். திருவோணம் பெருமாளுக்குரிய நட்சத்திரம் என்பதால், இந்த நட்சத்திரத்தினர் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.

திருவோணம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: 

தெய்வீக வழிபாட்டில் பக்தியும், பெரியவர்களிடத்தில் மரியாதையும் கொண்டிருப்பர். பொது விஷயங்களில் ஆர்வத்துடன் பங்கேற்பர். மற்றவர்களைப் புரிந்து கொள்வதில் வல்லவர்கள். பிறருக்கு உதவி செய்யும் எண்ணம் கொண்டிருப்பர். நிலபுலன்களை அதிகம் பெற்றிருப்பர்.

பிரதான தேவதை[Pradhana Devatha] : விஷ்ணு [Vishnu].
அதி தேவதை [AtiDevatha]  : விஷ்ணு [Vishnu]

இருப்பிடம்: 

வேலூரிலிருந்து சென்னை செல்லும் வழியில் 20 கி.மீ., தூரத்திலுள்ள
காவேரிப்பாக்கத்தில் இறங்கி, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2 கி.மீ. சென்றால் திருப்பாற் கடலை அடையலாம். இவ்வூரில் இரண்டு பெருமாள் கோயில்கள் இருப்பதால், பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் என கேட்டு செல்லவும்.

திறக்கும் நேரம்: காலை 7.30 - மதியம் 12 மணி-, மாலை 4.30 - இரவு 7.30 மணி

போன்:+91 - 4177 254 929, 94868 77896.

No comments:

Related Posts with Thumbnails